வெயிலுக்கு பஸ் ஸ்டாண்டில் பந்தல் போட்ட கோவில் குருக்கள்
வெயிலுக்கு பஸ் ஸ்டாண்டில் பந்தல் போட்ட கோவில் குருக்கள்
வெயிலுக்கு பஸ் ஸ்டாண்டில் பந்தல் போட்ட கோவில் குருக்கள்

ஐதராபாத் : கொளுத்தும் வெயிலில் பஸ்சுக்காக வெயிலில் காத்திருக்கும் பயணிகளுக்காக, ஆந்திராவைச் சேர்ந்த கோவில் குருக்கள், பந்தல் போட்டு சேவை செய்து வருகிறார்.
என் வீட்டருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் கூரை கிடையாது. எங்காவது கிடைக்கும் நிழலில் சில பயணிகள் நின்றிருப்பார்கள். பஸ் வரும் நேரத்தில் ஓடிச் சென்று, அந்த பஸ் நிற்காமல் சென்று விட்டால் மறுபடியும் நிழலை தேடுவர். ஏற்கனவே அவர் நின்றிருந்த நிழல் பகுதியை மற்றொரு பயணி ஆக்ரமித்திருப்பார். இந்த வழக்கமான நடவடிக்கை என்னுடைய மனதை பாதிக்கச் செய்தது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என, நினைத்தேன்.
என் வீட்டில் போதிய இடம் இல்லாத காரணத்தால், வேத வகுப்புக்காக வரும் மாணவர்களுக்காக வீட்டின் வெளிப்பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்திருந்தேன். இந்த கூரையில் பாதியை பிரித்தெடுத்து, வீட்டருகே உள்ள பஸ் நிறுத்தத்தில், கூரை அமைத்தேன். தற்போது ஏராளமானவர்கள் இந்த கூரை நிழலில் நிற்கும் போது மனம் சந்தோஷப்படுகிறது.
இதே போல சில இடங்களில் கூரை அமைத்து வந்தேன். பஸ் நிலையத்தில் கூரை தேவைப்படுபவர்கள் என்னை அணுகும்படி பஸ்நிறுத்தங்களில் என் மொபைல் போன் நம்பரை எழுதி வைத்தேன். இதை படித்துப் பார்த்து பலர் தொடர்ந்து போன் செய்து வருகின்றனர். இது தொடர்பாக, அமெரிக்காவிலிருந்து கூட சிலர் போன் செய்கின்றனர்.
என்னுடைய இந்த நடவடிக்கையை சில பத்திரிகைகளும், "டிவி' சேனல்களும் பெரிதுபடுத்தி விட்டன. இதன் காரணமாக பலர் மூங்கில் கொம்புகளையும், ஓலைகளையும், இலவசமாகவும், சகாய விலையில் அளித்து வருகின்றனர். இதனால், இதுவரை 15 இடங்களில் கூரை அமைத்து கொடுத்துள்ளேன். இன்னும் 30 இடங்களில் கூரை அமைக்க வேண்டியுள்ளது. இதை, கடவுள் எனக்கு இட்ட வேலையாக செய்கிறேன். இதற்கு நான் விளம்பரப்படுத்தி கொண்டால், எனக்கு புண்ணியம் கிடைக்காது. திருமணம் நடத்தி வைப்பது, வீட்டு விசேஷங்களில் பூஜை செய்வது போன்றவைகள் மூலம் கிடைக்கும் பணத்தின் மூலமும் கூரை வேயும் நடவடிக்கையில் இறங்கியுள்ளேன். இவ்வாறு சீனிவாசாச்சார்யுலு கூறினார்.